வேங்கைவயல் விவகாரத்தில் 6 பேருக்கு இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நீர்த்தேக்க தொட்டியை அப்பகுதி மக்கள் ஏறி பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருந்த சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே, இந்த வழக்கு கடந்த ஜனவரி 14ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலம் மாதிரியை அடிப்படையாக வைத்து, வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதனால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும் கூறி நீதிமன்றத்தை நாடியது சிபிசிஐடி. இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தற்போது டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உள்பட 25 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி இன்று ஒரு சிறுவன் உள்பட 6 பேருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது.