பரோட்டா கொடுக்காததால் திமுக பிரமுகர் ஆத்திரம்: அடித்து நொறுக்கப்பட்ட அசைவ ஓட்டல்!

பரோட்டா கொடுக்காததால் திமுக பிரமுகர் ஆத்திரம்: அடித்து நொறுக்கப்பட்ட அசைவ ஓட்டல்!

பரோட்டா கிடைக்காத ஆத்திரத்தில் ஓட்டலை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர், அந்த ஹோட்டல் உரிமையாளருக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். பலமுறை புகார் கொடுத்தும் அவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, பல்லவன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவியுடன் சேர்ந்து அதே பகுதியில் 'மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ்' என்ற அசைவ ஓட்டலை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு பத்து நாட்களே ஆன நிலையில் பரோட்டா கொடுக்காத ஆத்திரத்தில் அந்த ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் திறக்கப்பட்ட நாளிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி காந்தி என்ற நபர் ஹோட்டலுக்குள் நுழைந்து இல்லாத பொருட்களைக் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அந்த ஹோட்டலுக்கு வந்த சஞ்சீவி காந்தி உடனடியாக பரோட்டா வேண்டும் எனக் கேட்டுள்ளார். மது போதையில் அவர் இருந்ததால், பரோட்டா கிடைக்கக் கொஞ்சம் காலதாமதம் ஆகும் என பாண்டியன் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் தனது ஆதரவாளர்களை அழைத்து வந்த சஞ்சீவி காந்தி, கடையை அடித்து நொறுக்கி தகராறு செய்துள்ளார்.

காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இன்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது கடையிலிருந்த பாண்டியனின் மனைவி லட்சுமியிடம் “நான் திமுக கவுன்சிலர் மோகனோட அக்கா மகன். இந்த ஏரியாவுல எங்களைக் கேட்டாம எதுவும் நடக்காது. எங்கிருந்தோ வந்து இங்கு ஓட்டல் நடத்துறீங்க. எங்களை எதிர்த்து நீங்க தொழில் செய்ய முடியாது. இனியும் நீங்க போலீஸ் ஸ்டேஷன் போனால் கடையை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம் ” என மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இது குறித்து கடையின் உரிமையாளர் பாண்டியன் கூறுகையில்,“நாங்க கடை வச்சி பத்து நாள்தான் ஆகுது. அதில எட்டு நாளாவது சஞ்சீவி காந்தி வம்பிழுத்து சண்டை போட்டுட்டு போயிருப்பார். நாங்களும் அவரை எவ்வளவோ சமாதானப் படுத்தினோம். ஆனாலும் அவர் தொடர்ந்து கடையில் தகராறு செய்யறார். நேற்று பத்து பேரோட கடைக்குள்ள நுழைஞ்சு பரோட்டா, பிரியாணி என எல்லாத்தையும் எடுத்து கீழே கொட்டி நாசம் செஞ்சாங்க. டியூப் லைட், பேன் எல்லாத்தையும் உடைச்சாங்க. வேலை செய்து கொண்டிருந்த பெண்களையும் தகாத வார்த்தைகளால் மிரட்டினாங்க. பரோட்டா மாஸ்டர் ராமச்சந்திரனை செங்கல்லால் முகத்திலேயே அடிச்சதுல, அவரோட ஒரு பக்க காது கேட்காமல் போனது. கல்லாவுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு மிரட்டிட்டு போனாங்க. ஏற்கெனவே காவல்துறையில பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல. ஆனாலும் நேற்று நடந்த சம்பவத்துக்கும் புகார் கொடுத்துட்டுதான் வந்தேன். நள்ளிரவுல வந்த போலீஸ்காரங்க கடையப் பார்த்துட்டு, அவரையும் எச்சரித்துட்டு போனாங்க. இன்றைக்கு காலையில ஆட்டோவுல பத்து பேர் கடைக்கு வந்தாங்க. இங்க இருக்குற சாமனையெல்லாம் ஆட்டோவுல எடுத்துகிட்டு போயிடுவோம். கடையை அடிச்சு நொறுக்கிடுவோம். நீங்க எப்படி கடைய நடத்துறீங்கன்னு பார்க்கலாம். அதனால இன்னைக்கு காலையிலும் காவல்நிலையத்துல புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன் ” என்றார்.

செவிலிமேடு அம்பேத்கர் நகர்ப் பகுதியை சேர்ந்த சஞ்சீவி காந்தி மீது காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கு உள்ளிட்ட அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in