திருட்டு மின்சாரத்தில் தீபாவளி அலங்கார விளக்குகள் - சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் முதல்வர்!

திருட்டு மின்சாரத்தில் தீபாவளி அலங்கார விளக்குகள் - சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் முதல்வர்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது வீடு முழுவதும் அலங்கார விளக்குகளை ஜொலிக்க வைத்து இருந்தார் குமாரசாமி. இதற்காக அவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் குமாரசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். இதில் குமாரசாமியின் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, அண்மையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் ஐக்கியமானது. அதன் பிறகு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் குமாரசாமி. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் ஜேபி நகரில் குமாரசாமிக்கு சொந்தமான வீடு உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி குமாரசாமியின் இந்த வீடு மின்னொளியில் ஜொலித்தது.

வீடு முழுக்க சீரியல் லைட்கள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த லைட் செட்டிங்கிற்கு மின்சாரம் அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்த பதிவில் குமாராசாமியை விமர்சித்து கூறியிருந்ததாவது:- உலகிலேயே நேர்மையான நபரான குமாரசாமியின் ஜேபி நகர் வீட்டில் அலங்கார விளக்குகளுக்கு சட்ட விரோதமாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மின்சாரத்தை திருடும் அளவுக்கு ஏழ்மையில் வாடுவது சோகத்திற்கு உரியது" என்று சீண்டலாக கூறியிருந்தது.

இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறுகையில், "பெஸ்காம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும். எச்.டி குமாரசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு எதுவும் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

குமாரசாமி
குமாரசாமி

முன்னதாக குமாரசாமியை கேலி செய்யும் வகையில் பதிவிட்டு இருந்த காங்கிரஸ், "அந்த அளவுக்கு வறுமையில் நீங்கள் வாடினால், 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் கிருக ஜோதி திட்டத்திற்கு விண்ணப்பியுங்கள். கிருக ஜோதி திட்டத்தின் கீழ் ஒரே ஒரு மீட்டர் இணைப்பு மட்டுமே கொடுக்கப்படும் என உங்களுக்கு தெரியாது. உங்கள் பெயரிலேயே பல இணைப்புகள் உள்ளன" என்றும் சாடியிருந்தது.

இப்படி காங்கிரஸ் பல்வேறு வகையில் விமர்சித்து வந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள எச்.டி குமாரசமி, இந்த விவகாரத்தில் தனது தவறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், "வீட்டில் அலங்காரப்படுத்தும் பணி தனியார் ஒருவருக்கு கொடுத்து இருந்தோம். அவர்தான், அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கரண்ட் இணைப்பு கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் எனது கவனத்திற்கு வந்த உடனேயே, அந்த சட்டவிரோத இணைப்பை துண்டித்து எனது வீட்டில் உள்ள மீட்டர் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுக்க அறிவுறுத்தினேன். பெங்களூர் மின்சார விநியோக நிறுவன அதிகாரிகள் எனது வீட்டிற்கு ஆய்வுக்கு வந்து நோட்டீஸ் அனுப்பலாம். நான் அபராதம் செலுத்த தயாராக உள்ளேன். இந்த சின்ன விஷயத்தைக் கூட இவ்வளவு பெரிய பிரச்சினையாக காங்கிரஸ் ஆக்குகிறது. நான் எந்த அரசு சொத்துக்களையோ, தனி நபரிடம் இருந்தோ எதையும் ஆக்கிரமிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in