20 பெண்கள் பாலியல் வன்கொடுமை: துணை நடிகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

20 பெண்கள் பாலியல் வன்கொடுமை: துணை நடிகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட துணை நடிகரின் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஓட்டேரியை சேர்ந்த தொழிலதிபர் மகளுடன், 2 இளம் பெண்கள் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்த முகமது செய்யது (26) என்பவர் பழக்கமானார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்யும் ஸ்டைலான புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நண்பர்களாகி பிறகு காதலித்தோம். கடந்த 2020-ம் ஆண்டு வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே அவரது காரிலேயே என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதன் பிறகு திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்தோம். பிறகு கடந்த டிசம்பர் 21-ம் தேதி முகமது செய்யது தனது காரில் நட்சத்திர ஓட்டலுக்கு என்னை அழைத்து சென்றார். அப்போது அந்த ஓட்டலில் இருந்து 3 பெண்கள் முகமது செய்யதுவை திருமணம் செய்ய போவதாக என்னிடம் கூறினர்.

முகமதுவுடன் இருக்கும் இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐடியை எடுத்து அதன் மூலம் அவர்களை தொடர்பு கொண்டபோதுதான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நான் கேட்டதற்கு கொலை செய்துவிடுவேன் என்று முகமது செய்யது கூறினார். எனது அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர், முகமது மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி முகமது செய்யது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ஜாமீன் தந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார். முகமது செய்யது கடுமையான குற்றம் செய்துள்ளார் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முகமது செய்யதுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories

No stories found.