
டெல்லி சுந்தர் நகர் பகுதியில் இந்து கோயில் ஒன்றில் பிரசாதம் வாங்கி உண்ட, இஸ்லாமிய மாற்றுத்திறனாளி இளைஞரை கும்பல் ஒன்று அடித்தே கொன்ற அவலம் அரங்கேறி இருக்கிறது.
டெல்லி சுந்தர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் கோயில் ஒன்றில் முகமது இஸ்ரார் என்ற இஸ்லாமிய இளைஞர் கும்பல் வன்முறைக்கு பலியாகி இருக்கிறார். கோயில் பிரசாதத்தை வாங்கி உண்ண முயன்றதாக முகமது இஸ்ராரை சில சூழ்ந்து தாக்கியுள்ளனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முகமது இஸ்ரார் தெளிவான பதில் அளிக்கவில்லை என்று அங்கிருந்தவர்கள் ஆவேசம் அடைந்தனர்.
அதன் பின்னர் கோயிலில் திருட வந்ததாக குற்றம்சாட்டி அருகிலிருந்த கம்பத்தில் கட்டிவைத்து தடிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த இஸ்லாமிய இளைஞர் இறந்துவிடக் கூடும் என அஞ்சி அப்படியே விட்டுச் சென்றனர்.
சம்பவம் நிகழ்ந்த செவ்வாய் அன்று மாலை முகமது இஸ்ரார் வீட்டு வாசலில் அவர் கிடத்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் முகமது இஸ்ராரின் தந்தை அப்துல் வாஜித் நடந்தது அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொண்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது இஸ்ரார் சிகிச்சை பலனின்றி பின்னர் இறந்திருக்கிறார்.
போலீஸார் விசாரணையில் முகமது இஸ்ரார் மாற்றுத்திறனாளி மட்டுமன்றி சற்று மனநலன் பாதித்தவர் எனவும் தெரிய வந்திருக்கிறது. பசி காரணமாக கோயில் பிரசாதத்தை உண்ண முயன்றவர் மீது இரக்கமின்றி சிலர் தாக்கியிருக்கின்றனர். முகமது இஸ்ராரின் பேச்சு புரியாததில், அவரை சூழ்ந்த வன்முறை கும்பல் இளைஞரின் உயிர் பாதிக்கும் அளவுக்கு தாக்குதல் நடத்தியிருக்கிறது.
முகமது இஸ்ரார் மரணத்தை அடுத்து இருதரப்பு மோதல் சூழலை தவிர்க்க, சுந்தர் நகர் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி பதிவுகள் வாயிலாக முகமது இஸ்ராரை தாக்கிய நபர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியிருக்கிறது.