
தியேட்டரில் வெளியான 'கபில் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் சில மணி நேரத்தில் சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியானதால் இயக்குநர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் சாமி நகர் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனி சௌந்தரராஜன். இவர் தனலட்சுமி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். மேலும் இவர் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'கபில் ரிட்டன்ஸ்' (KAPIL RETURNS) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் சரவணன், ரியாஸ் கான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'கபில் ரிட்டன்ஸ்' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்ரீனி சௌந்தரராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில் 'கபில் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த 3-ம் தேதி தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.
இந்தபடம் தயாரிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு இத்திரைப்படத்தை திரையிட்டதாகவும், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே மர்ம நபர்கள் யாரோ சட்டவிரோதமாக இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி முதல் முறையாக 'கபில் ரிட்டன்ஸ்' படத்தை தயாரித்து, இயக்கியுள்ளேன், இந்த சூழ்நிலையில் படம் ஆன்லைனில் வெளியானது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிகுந்த மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், ஆன்லைனில் சட்டவிரோதமாக திரைப்படத்தை வெளியிடப்பட்ட நபர் யார் என்பதை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக ஆன்லைனில் சட்டவிரோதமாக படங்கள் வெளியிடுவதைத் தடுக்க காவல்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.