பெரும் சோகம்! இறந்த பூனையை எடுக்க கிணற்றில் இறங்கியவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

பெரும் சோகம்! இறந்த பூனையை எடுக்க கிணற்றில் இறங்கியவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!
Updated on
1 min read

கிணற்றில் இறந்து கிடந்த பூனையை எடுக்க கிணற்றுக்குள் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை ராமாபுரம் மூன்லைட் நகரை சேர்ந்தவர் தயாளன்(69). இவருக்கு தமிழ்மொழி என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். தயாளன் தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மாலை தயாளன் வீட்டில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் இரண்டு பூனைகள் தவறி விழுந்து இறந்துள்ளன. பின்னர் தயாளன் தனது மனைவி தமிழ்மொழியுடன் சென்று கிணற்றில் இறந்து கிடந்த பூனையை கயிற்றின் மூலம் மேலே எடுக்க முன்றுள்ளார். ஒரு பூனையை வெளியே எடுத்த நிலையில் மற்றொரு பூனையை எடுக்க முடியாததால் தயாளன் பைப்பை பிடித்து கொண்டு கிணற்றில் இறங்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக தயாளன் தவறி கிணற்றில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழ்மொழி உடனே கூச்சலிட்டதை அடுத்து அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய தயாளனை மீட்க முயன்றனர். அது முடியாமல் போனதால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு பின்னர் தயாளன் உடலை வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயாளன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ராமாபுரம் போலீஸார் தயாளன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் தயாளன் கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கியபோது விஷவாயு தாக்கியதால் மயங்கி தண்ணீரில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in