ஆகாயத்தில் ஆபாசம்; விமானத்தில் பெண்களை ரகசிய வீடியோ எடுத்தவருக்கு எதிராக சாட்டை சுழற்றும் மகளிர் ஆணையம்

ஸ்வாதி மாலிவால் - ஸ்பைஸ்ஜெட் விமானம்
ஸ்வாதி மாலிவால் - ஸ்பைஸ்ஜெட் விமானம்

பறக்கும் விமானத்தில் விமானப் பணிப்பெண் மற்றும் பெண் பயணியை, ஆட்சேபனைக்குரிய வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய நபருக்கு எதிராக, டெல்லி மகளிர் ஆணையம் சாட்டையை சுழற்றி உள்ளது.

ஆக.16 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஆண் பயணி ஒருவர் அருவருக்கத்தக்க செயலை மேற்கொண்டுள்ளார். விமானப் பணிப்பெண் மற்றும் சக பெண் பயணி ஆகியோரை ஆட்சேபனைக்குரிய வகையிலும், ஆபாசமான கோணத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.

மூன்றாம் நபர் அறியாது ரகசியமாக எடுக்கப்பட்ட அந்த பதிவுகளை இன்ஸ்டாகிராம் வாயிலாக அந்த நபர் பரப்பியுள்ளார். இது இணையவெளியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட நபருக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

ஸ்பைஸ்ஜெட் விமானம்
ஸ்பைஸ்ஜெட் விமானம்

இதனையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை எடுத்திருப்பதாக அதன் தலைவி ஸ்வாதி மாலிவால் தெரிவித்தார். மேலும், ஆகாயத்தில் நடந்த ஆபாச செயல்பாடு தொடர்பாக டெல்லி காவல்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற விவரங்களை ஸ்வாதி மாலிவால் கோரியிருக்கிறார்.

இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனில், அதற்கான காரணத்தையும் கேட்டிருக்கிறார். இவை தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் விடுத்த நோட்டீஸுக்கு ஆக.23 அன்று, டெல்லி காவல்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை உரிய விளக்கமளிக்க இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in