இளங்கோ, ராசாத்தி தம்பதிகள்
இளங்கோ, ராசாத்தி தம்பதிகள்

சிறுவன் மீது சிறுநீர் வீச்சு... நாயை கடிக்க விட்ட கொடூரம்; மணப்பாறை அருகே பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உயர் சாதியினரின் தொடர் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை எடுத்த விடதிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, ராசாத்தி தம்பதிகள் தங்களது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில், இளங்கோவின் குடும்பமும் ஒன்று.

இவரது வீட்டிற்கு அருகே வடிவேலு (45) என்பவர் வசித்து வருகிறார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த வடிவேலு பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளங்கோவின் குடும்பத்தினரை சாதி ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 8 நாய்களை வடிவேலு வளர்த்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு இளங்கோவின் 6 வயது மகனை, நாய்கள் விரட்டிச் சென்றுள்ளான். அப்போது கீழே விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நாய்களை விட்டு சிறுவனை கடித்த வைத்ததாக புகார்
நாய்களை விட்டு சிறுவனை கடித்த வைத்ததாக புகார்

இது தொடர்பாக சிறுவனின் தாய் ராசாத்தி வடிவேலுவின் மனைவி அழகுமணியிடம் முறையிட சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அழகுமணி ராசாத்தியை சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது. மற்றொரு நாள் வடிவேலுவின் மகன் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தனது மகன் மீது ஊற்றி விட்டதாக இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முன்விரோதங்களை மனதில் வைத்துக் கொண்ட ராசாத்தியை கடந்த அக்டோபர் 4ம் தேதி, அழகுமணி தண்ணீர் குழாயால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராசாத்தி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் கடந்த அக்டோபர் 8ம் தேதி வீடு திரும்பினார்.

சாதிய கொடூரத்தை தடுக்க கோரி கதறும் ராசாத்தி
சாதிய கொடூரத்தை தடுக்க கோரி கதறும் ராசாத்தி

இந்த சம்பவங்கள் தொடர்பாக இளங்கோ மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததோடு, உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இளங்கோ தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே புகார் அளித்த மறுநாளே தங்கள் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வி வீசி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் உரிய நடவடிக்கை எடுத்து சாதி கொடூரத்தில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என இளங்கோ குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தீண்டாமை கொடுமை திருச்சி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in