தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகளை, விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சென்னையை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர், கையில் பெரிய பிளாஸ்டிக் கூடைகளை கொண்டு வந்தார். அது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது, அதில் நாய் குட்டி இருப்பதாக அந்த பயணி கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த பயணியின் கூடையை வாங்கி பரிசோதனை நடத்தினர்.
கூடைகளுக்குள் உயிருடன் கூடிய மலைப்பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அந்த கூடைகளை முழுமையாக திறந்து ஆய்வு செய்ததில், 16 மலைப்பாம்பு குட்டிகள், நீல நிற உடும்புகள் 30, வெளிநாட்டு பெர்சியன் வகை அணில்கள் 4-ம் இருந்தன. இதையடுத்து, அந்த பயணியை அதிகாரிகள் காவலில் வைத்தனர்.
உடனடியாக, மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து சென்ற அவர்கள், அந்த உயிரினங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நீல நிற உடும்புகள் மத்திய, தென் அமெரிக்க வனப்பகுதிகளை சேர்ந்தது என்றும், பெர்சியன் வகை அணில்கள் ஈரான் மற்றும் மேற்காசிய வனப்பகுதிகளை சேர்ந்தது என்றும், மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும், வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர் பிரதேசங்களில் இருக்கக் கூடியவைகள் என்று கண்டறிந்தனர். மேலும், இவை எதுவும் அதிக விஷத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், ஆபத்தானவைகள் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, முறையான ஆவணங்கள் இன்றி, வெளிநாட்டு உயிரினங்களை கடத்தி வந்த இளைஞரை கைது செய்த விமான நிலைய போலீஸார், மீட்கப்பட்ட உயிரினங்களை மீண்டும் அதன் சொந்த நாட்டிற்கே அனுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், இதற்கான கட்டண செலவை கடத்தல் ஆசாமியிடம் இருந்து பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.