கோவைக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு, 11 ஆயிரம் ஆமைகள், சிலந்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 7ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகள், சில பார்சல்களை விமான நிலையத்தில் விட்டுச்சென்றிருந்தனர். அதில் சில பெட்டிகள் வித்தியாசமாக இருந்ததால், அதனை ஸ்கேனரில் வைத்து சோதனையிட்ட போது, அதில் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் இருப்பது தெரியவந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த பெட்டிகளை பிரித்து பார்த்த போது, அதில் ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட அரிய வகை பந்து மலைப்பாம்பு, அரிய வகை சிலந்திகள், ஓணான்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரக ஆமைகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதில் பெரும்பாலான ஆமைகள் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டதில், 3 பயணிகள் அந்த பெட்டிகளை விட்டுச்சென்றது தெரியவந்தது. அவர்களிடம் பேசி வரவழைத்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டோம்னிக், ராமசாமி ஆகியோர் என்பது தெரியவந்துள்ள நிலையில், தப்பியோடிய மேலும் ஒருவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கள்ளச்சந்தையில் இந்த விலங்குகளை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்திருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.