உதவி ஜெயிலரைக் குடும்பத்துடன் கொளுத்த முயற்சி: செல்போன் பறிக்கப்பட்டதால் கூலிப்படையை ஏவிய கைதி

கடலூர் மத்திய சிறைச்சாலை
கடலூர் மத்திய சிறைச்சாலை

தன்னிடம் இருந்த செல்போன் பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிறைக்கைதி ஒருவர் கூலிப்படையை அனுப்பி, உதவி ஜெயிலரைக் குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக இருப்பவர் மணிகண்டன். இவர் சிறை வளாகம் அருகில் உள்ள சிறைக் காவலர்கள் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டனர். சமையல்கட்டு பகுதியில் பற்றிய தீ வேகமாக எரிய ஆரம்பித்தது. வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு தீயையும் அணைத்தனர். தீப்பற்றிய பகுதியில் மணிகண்டன் குடும்பத்தினர் யாரும் இல்லாததால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மணிகண்டனின் மனைவி தாய் உள்ளிட்டவர்கள் மற்றொரு புறத்தில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸார் விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் சிறையில் இருக்கும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த கைதி தனசேகரன் என்பவர் கூலிப்படை மூலமாக இந்தச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிறையில் இருக்கும் தனசேகரன் வைத்திருந்த செல்போனை மணிகண்டன் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன் கூலிப்படை மூலமாக அவரை உயிரோடு வீட்டுக்குள் வைத்து எரிக்க முயற்சித்ததாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிறைக் கைதி ஒருவர் உதவி ஜெயிலரைக் குடும்பத்துடன் எரிக்க முயற்சித்திருக்கும் இந்த சம்பவம் சிறைக்காவலர்கள் மற்றும் தமிழக போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in