ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய்!

ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய்!
கார்த்திகா.

கள்ளக் காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது குழந்தையைத் தாயே விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

குமரிமாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்(34). இவர் கட்டுமானப் பணியாளராக உள்ளார். இவருக்கு கார்த்திகா(21) என்ற மனைவியும் சஞ்சனா, சரண் என இரு குழந்தைகளும் உண்டு. இதில் சஞ்சனாவுக்கு மூன்றரை வயதும், சரணுக்கு ஒன்றரை வயதும் ஆகிறது. இதில் சரண் வீட்டில் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த வைத்திருந்த எலிப்பொடியை சாப்பிட்டு மயங்கிவிட்டதாக கட்டிட வேலையில் இருந்த ஜெகதீஸ்க்கு தகவல் வந்தது. அவர் உடனே தன் குழந்தையை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு குழந்தை சரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்க ஜெகதீஸ் இடிந்து போய்விட்டார்.

குழந்தையின் சாவு குறித்து மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்தனர். அத்துடன் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் சரணுக்கு எலிப் பொடியை உணவோடு கலந்து கொடுக்கப்பட்ட அடையாளங்கள் தென்பட்டது. இதையடுத்து போலீசார் சரணின் பெற்றோரை விசாரித்தனர். அப்போது கார்த்திகாவின் செல்போனை ஜெகதீஸ் சோதனை செய்துள்ளார். கார்த்திகா தனது மொபைலுக்கு வந்த அழைப்புகள், தான் போன் செய்த அழைப்புகள் ஆகியவற்றையும் அழித்திருந்தார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் அவரது செல்போன் எண்ணின் அடிப்படையில் செய்த தொடர் ஆய்வில் காய்கறிக்கடை நடத்திவரும் மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவரோடு கார்த்திகாவுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. 21 வயதான கார்த்திகா தனக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருப்பதை மறைத்து, சுனிலுடன் பழகி வந்துள்ளார். எங்கே தனக்குக் குழந்தை இருப்பது தெரிந்தால் சுனில் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என குழந்தைகள் இருவரையும் கொலை செய்ய, உப்புமா சமைத்து, அதில் எலிப் பொடியைக் கலந்துள்ளார். இதில் மகன் சரண் மட்டும் உயிர் இழந்தார். மகள் சஞ்சனா உப்புமா பிடிக்காது என குறைவாக சாப்பிட்டதால் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.

இதில் கார்த்திகா மிகவும் திட்டமிட்டு சில காய்நகர்த்தல்களைச் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கார்த்திகா தன் கணவரிடமே தன் வீட்டில் எலித்தொல்லை இருப்பதாக நம்பவைத்து வீட்டில் ஆங்காங்கே எலியைக் கொல்லும் பொடியை கடந்த சில தினங்களாகவே தூவியுள்ளார். அண்டை வீடுகளிலும் இதே பொய்யைச் சொல்லி நம்பவைத்துள்ளார். தன் கணவரிடமே எலித்தொல்லை குறித்து பொய் சொல்லி, அவைகளைக் கொல்ல பொடியை வாங்கிவரச் சொல்லி, பிள்ளைகளுக்குக் கொடுத்துள்ளார். மகனைக் கொன்ற கொடூரத் தாய் கார்த்திகாவை மார்த்தாண்டம் போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.