ஒருதலை காதலால் நடந்த விபரீதம்... கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தாய்மாமன் தற்கொலை!

ஒருதலை காதலால் நடந்த விபரீதம்... கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தாய்மாமன் தற்கொலை!

திருப்பத்தூர் அருகே ஒருதலை காதல் காரணமாக கல்லூரி மாணவியை கொலை செய்த தாய்மாமன், விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரே இடத்தில் உடல்களை புதைக்குமாறு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

சரண்ராஜ்
சரண்ராஜ்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இளம்பெண்ணை அவரின் தாய் மாமன் சரண்ராஜ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். சரண்ராஜிக்கு 35 வயது ஆகிறது. இவர் புகைப்பட கலைஞராகவும், ஓட்டுநராகவும் வேலை செய்து வந்திருக்கிறார்.

தன்னைவிட 17 வயது குறைவான, அக்காள் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்பிய சரண்ராஜ், தனது அக்காவிடம் சென்று திருமணம் குறித்து அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், உடன்பிறந்த தம்பியாக இருந்தாலும், சரண்ராஜ் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படுவதால், ‘மகளை திருமணம் செய்துகொடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாக அவரின் அக்கா தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால், இளம்பெண் வீட்டில் இருந்தார். வழக்கம்போல், அவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். இதையறிந்த சரண்ராஜ், இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியிருக்கிறார்.

இளம்பெண், காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சரண்ராஜ், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கவில்லையென்றால், செத்துப்போ..’ என்றுசொல்லி, அவரைத் தாக்கி, மறைத்து கொண்டுவந்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்றார்.

இதையடுத்து, தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாக கடிதம் எழுதி, இளம்பெண்ணின் சடலத்தின் அருகே வைத்த சரண்ராஜ், தனது செல்போனையும் அங்கேயே வீசிவிட்டு, தப்பி ஓடினார்.

அக்கம், பக்கம் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின்பேரில், நாட்றம்பள்ளி போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், தப்பி ஓடிய தாய்மாமன் சரண்ராஜை தீவிரமாக தேடினர். அப்போது, அவர் ஒரு டீக்கடையில், எந்தவித பதற்றமுமில்லாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட போலீஸார், அவரை கைது செய்தனர்.

அப்போது அவர் விஷம் குடித்துவிட்டதாக கூறியதால் உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முன்பாக சரண்ராஜ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழும் போது ஒன்றாக வாழ முடியவில்லை, செத்த பிறகாவது ஒன்றாக இருக்க வேண்டும். அதனால் இறந்த அக்கா மகளின் உடலுடன் சேர்த்து புதைக்க வேண்டுமென கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in