தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி! தலைமறைவான அண்ணன் மீது தம்பி போலீஸில் புகார்

பொதுமக்கள் முற்றுகை
பொதுமக்கள் முற்றுகை

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவான அண்ணன் அண்ணாமலை மீது அவரது தம்பி உள்பட பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அண்ணாமலையை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால்‌ பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

சென்னை சிந்தாரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அண்ணாமலை மற்றும் நாராயணன். அண்ணாமலை சிந்தாரிப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வெள்ளி மற்றும் தங்க நகைகளை பாலிஷ் போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தனது தம்பி நாராயணனை உடன் சேர்த்துக்கொண்டு தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ஆரம்பத்தில் சிந்தாரிப்பேட்டை பகுதியில் மட்டும் சீட்டு நடத்தி வந்த அண்ணாமலை பின்பு எம்கேபி நகர், வியாசர்பாடி, நம்மாழ்வார் பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சீட்டு தொழிலை விரிவுபடுத்தி அதன் மூலம் வரும் பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார்.

பொதுமக்கள் முற்றுகை
பொதுமக்கள் முற்றுகை

கடந்த 10 ஆண்டுகளாக சீட்டு தொழில் நடத்தி வரும் இவரும் கொரோனா காலகட்டத்திலும் சீட்டு தொகை, தீபாவளி நகை ஆகியவற்றை முறையாக அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்ணாமலையிடம் பணம் கட்டி சீட்டில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக அண்ணாமலை தனது தம்பி நாராயணனை சேர்த்து சீட்டு தொழிலில் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு அவரை சீட்டு தொழிலில் இருந்து கழற்றி விட்டு தன்னிச்சையாக தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சீட்டு கட்டிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அளிக்காமல் அண்ணாமலை தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

மேலும் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அண்ணாசாலை வீட்டிற்கு சென்று பணம் கேட்டபோது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் எங்களுக்கு எதுவும் தெரியாது. கணவரிடம் சென்று கேளுங்கள் என ஏளனமாக பதில் அளித்துள்ளனர்.

நாராயணன்
நாராயணன்

மேலும் கடந்த 9 ஆண்டுகளாக அண்ணாமலையுடன் சேர்ந்த சீட்டு தொழில் செய்து வந்த அவரது தம்பி நாராயணனையும் அவர் ஏமாற்றியுள்ளார். நாராயணனை நம்பி வாடிக்கையாளர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவரை பணம் கேட்டு தொந்தரவு அளித்து வரும் நிலையில் நாராயணனும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் சுருட்டிக்கொண்டு தலைமறைவான அண்ணாமலையை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட‌‌ தம்பி நாராயணன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "நாங்கள் பணம் கட்டியது மட்டுமல்லாமல் எங்களுக்கு தெரிந்தவர்களையும் இதில் அறிமுகப்படுத்தி அவர்களையும் பணம் கட்ட வைத்துள்ளோம். பணம் கட்டிய அனைவரும் எங்களை பணம் கேட்டு தொல்லை செய்து வருவதால் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளோம். எனவே காவல்துறையினர் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு தலைமறைவான அண்ணாமலையை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரவேண்டும்" என கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in