முதலை கடித்ததில் மூதாட்டி சின்னம்மா காயம்
முதலை கடித்ததில் மூதாட்டி சின்னம்மா காயம்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை கடித்த ‘முதலை’... அரியலூர் அருகே அதிர்ச்சி!

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டுயிருந்த மூதாட்டி, முதலைக் கடித்ததில் பலத்த காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று மாலை நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். கரையோரமாக ஆடுகளை சின்னம்மா மேய்த்துக் கொண்டிருந்தார்.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை

கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாட்களாக முதலை நடமாட்டம் அடிக்கடி தென்பட்டு வருகிறது. சின்னம்மா ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, கரையோரம் படுத்திருந்த முதலை ஒன்று திடீரென அவரது காலைப்பிடித்து கடித்துக் குதறியது. இதில் அதிர்ச்சியடைந்த சின்னம்மா, வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது, முதலை சின்னம்மாவின் காலை கடித்து இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்

இதையடுத்து, அவர்கள் அருகில் கிடந்த கற்கள், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு முதலையை அடித்துள்ளனர். இதனால் முதலை தனது பிடியை விட்டுவிட்டு மீண்டும் ஆற்றிற்குள் ஓடி மறைந்தது. படுகாயமடைந்த சின்னம்மாவை அவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முதலை நடமாட்டம் இருப்பதால், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் எனவும், குளிக்க ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in