யாசகரைக் கொலை செய்து காரை எரித்து விபத்து நாடகம்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய டிரைவர்!

கைது
கைது

உத்தரப்பிரதேசத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு யாசகரைக் கொலை செய்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். 80 லட்ச ரூபாய் விபத்துக் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக யாசகரைக் கொலை செய்து விபத்து போல அவர் செட்டப் செய்ததும் அம்பலமாகியுள்ளது.

கொலை
கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ரகாப்கஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2006 ஜூலை 31 அன்று ஒரு கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் எரிந்தது. இந்த காரில் இருந்த ஓட்டுநரான தனது மகன் அனில்சிங் சவுத்ரி தீயில் கருகி இறந்து விட்டதாக அவரது தந்தை போலீஸில் அடையாளம் காண்பித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அனில்சிங் சவுத்ரி இன்னும் சாகவில்லை என்றும் அவர் நிகோல் பகுதியில் ராஜ்குமார் சவுத்ரி என்ற பெயரில் வசித்து வருவதாகவும் அகமதாபாத் போலீஸாருக்கு தற்போது தகவல் கிடைத்தது.

இதையடுத்து கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள பட்டா பர்சௌல் கிராமத்தில் பதுங்கியிருந்த அனில் சிங் சவுத்ரியை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.

விபத்துக் காப்பீடு
விபத்துக் காப்பீடு

அனில்சிங் சவுத்ரி 2004-ல் விபத்து காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். அத்துடன் காரும் வாங்கியுள்ளார். தனது தந்தையுடன் சேர்ந்து தன் இறந்தது போல செட்டப் செய்து விபத்துக் காப்பீட்டுத் தொகையை அபகரிக்க அனில்சிங் திட்டமிட்டார்.

இதன்படி அனில்சிங், அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் ரயில்களில் யாசகம் பெறும் ஒரு யாசகனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அழைத்து வந்துள்ளனர். இதன்பின் அனில்சிங் சவுத்ரி கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது போல ஏற்பாடு செய்து அதில் யாசகரைக் கொலை செய்து தீயில் போட்டுள்ளனர்.

அனில்சிங் விபத்தில் சிக்கி தீயில் எரிந்து இறந்து விட்டதாக அவரது தந்தை வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் பின் விபத்துக் காப்பீட்டுத்தொகை 80 லட்ச ரூபாயை வாங்கி அனில்சிங், அவரது தந்தை, சகோதர்கள் பிரித்துக் கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து யாசகரை கொலை செய்த கார் ஓட்டுரான அனில்சிங்கை(39) 17 ஆண்டுகள் கழித்து போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து யாசகரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்யப்பட்ட யாசகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இக்கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்," அனில்சிங் தனது பெயரை ராஜ்குமார் சவுத்ரி என மாற்றி ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டையும் வாங்கியுள்ளார். ஆட்டோ மற்றும் காரையும் கடனில் வாங்கியுள்ளார். யாசகர் கொலை செய்யப்பட்ட பிறகு சொந்த ஊருக்கு அவர் செல்லவில்லை. அவரது குடும்பத்தினர் யாருடன் தொலைபேசியில் பேசவில்லை. அவர் மேல் நடவடிக்கைக்காக உத்தரபிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்" என்றார்.

விபத்துக் காப்பீட்டுத் தொகைக்காக ஒரு கொலை செய்து அதை விபத்தாக மாற்றிய குற்றவாளி 17 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in