2 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்... கோவையில் சோகம்

இரண்டு வயது குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
இரண்டு வயது குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியரான, இவரது மனைவி லஷிகா (23). இவர்களுக்கு கேசின்யா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், லஷிகா தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிவெட்டி விட்டு வரும்படி கூறினார். அதற்கு கார்த்திகேயன் குழந்தைக்கு பழனி முருகன் கோவிலில் எடுக்க வேண்டும், அதனால் முடி வெட்ட வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து லஷிகா தனது குழந்தைக்கு அவரே முடி வெட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு கோபமடைந்த கார்த்திக்கேயன் தனது மனைவியை கண்டித்ததாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கார்த்திகேயன் வெளியே சென்றார். இதில் மனவேதனை அடைந்த லஷிகா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.அதன்படி பெண் குழந்தை கேசின்யாவுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து, பயந்து போன லஷிகா, தனது கணவருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் பதறியடித்து உடனடியாக வீட்டிற்கு ஓடியுள்ளார்.

அங்கு மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு இருவருக்கும் முதலுதவி அளித்த மருத்துவர்கள், உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறினர்.

இதையடுத்து, இருவரையும் மேல் சிகிச்சைக்காக விமான நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையும், தாயும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in