நெல்லையில் பயங்கரம்; செய்தியாளர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

நெல்லையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
நெல்லையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

நெல்லையில் சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் அலுவலகத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பட்டியலின மாணவரான சின்னத்துரை என்பவரின் வீட்டிற்குள் புகுந்த 6 சிறுவர்கள், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்களை தடுக்க முயன்ற சின்னத்துரையின் 14 வயது தங்கை சந்திரா செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்களின் தாத்தா கிருஷ்ணன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒன்று மட்டும் வெடித்தது
3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒன்று மட்டும் வெடித்தது

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்த போலீஸார், நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் உறவினர் உட்பட 6 மாணவர்களை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில், சின்னத்துரை பள்ளியில் நன்றாக பயின்று வந்ததால் ஆத்திரமடைந்த வேறு சாதி மாணவர்கள் அவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதோடு, சாதி ரீதியாக அவமதித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக சின்னத்துரை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததால், ஆத்திரத்தில் மாணவர்கள் 6 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

சாதிய வன்கொடுமை குறித்த செய்தியை பதிவிட்டதால் ஆத்திரத்தில் எதிர்வினை என தகவல்
சாதிய வன்கொடுமை குறித்த செய்தியை பதிவிட்டதால் ஆத்திரத்தில் எதிர்வினை என தகவல்

இந்த சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வானமாமலை என்பவர் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பிற்கும், வானமாமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை நாங்குநேரி பகுதியில் உள்ள வானமாமலைக்கு சொந்தமான கடையில் அவர் இருந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு தொடர்பாக போலீஸார் விசாரணை
நாட்டு வெடிகுண்டு வீச்சு தொடர்பாக போலீஸார் விசாரணை

இதில் இரண்டு குண்டுகள் வெடிக்காத நிலையில் ஒரே ஒரு குண்டு மட்டும் அங்கிருந்த போர்டில் பட்டு வெடித்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதிய வன்கொடுமை தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக செய்தியாளரின் மீது கொலை வெறியுடன் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in