கோடிக்கணக்கில் பண மோசடி; ராசிபுரம் பெண் கவுன்சிலர் கைது!

கோடிக்கணக்கில் பண மோசடி; ராசிபுரம் பெண் கவுன்சிலர் கைது!

பண மோசடி புகாரில் ராசிபுரம் 12-வது வார்டு பெண் கவுன்சிலர் சசிரேகா சதீஷை நாமக்கல் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சசிரேகா 12-வது சுயேட்சை கவுன்சிலராக உள்ளார். அவரது கணவர் சதீஷ். இவர்கள் இருவரும் திமுக நிர்வாகி செல்லவேல் (எ) செல்லப்பனிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அதே போல், குறைந்த வட்டிக்கு பல கோடி பணம் பெற்று தருவதாகவும், ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகவும் கூறி சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் 12-வது வார்டு கவுன்சிலர் சசிரேகா மற்றும் அவருடைய கணவர் சதீஷூக்கு மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து பலமுறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கணவன், மனைவி இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நகர மன்ற கூட்டத்திற்கு சசிரேகா கையெழுத்து போட வருவதை அறிந்த குற்றப்பிரிவு போலீஸார், நகர மன்ற கூட்டத்திற்குள் புகுந்து சசிரேகாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் முக்கிய அரசியல்வாதிகளிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கவுன்சிலர் சசிரேகாவின் கணவர் சதீஷ் தலைமறைவாக உள்ளதால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். அதே போல் சசிரேகாவின் மாமனார் வெங்கடாஜலத்தையும் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in