`அத்தனை பிராடுகளும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க'- திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரின் `தெறி' ஆடியோ

இணை ஆணையர் குமாரதுரை
இணை ஆணையர் குமாரதுரை

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய ஆண்டு முழுவதுமே கூட்டம் அலைமோதும். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்கு விஐபி டிக்கெட்டில் பெரிய அளவில் நூதன ஊழல் நடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஐபி தரிசனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. இதனால் விஐபி தரிசன டிக்கெட் வினியோகமும் இப்போது சட்டப்படி இல்லை. ஆனால் இதை வேலியே பயிரை மேய்வது போல் சில அறநிலையத்துறைப் பணியாளர்கள் பக்தர்களை மணிக்கணக்கில் ஒருபக்கம் காக்க வைத்துக்கொண்டு, இன்னொரு புறத்தில் வசதி படைத்தோரை கையூட்டு பெற்றுக்கொண்டு விஐபி தரிசன டிக்கெட் நடைபாதையின் வழியே அனுப்பிவைக்கின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் இணை ஆணையர் குமாரதுரை, கோயில் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கோயிலை நல்லமுறையில் நிர்வாகம் செய்ய போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அதில் நீங்கள் குளிர்காய்ந்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்னவெல்லாம் பிராடுதனம் செய்கிறீர்கள் என்பது வீடியோவில் பதிவாகிக்கொண்டு இருக்கிறது. நம் கோயிலில் இருப்பவர்களும் அதை சேகரித்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்புகிறார்கள். சாவியை யாரிடமாவது கொடுத்துவிட்டு கோயில் உள்துறையில் இருக்கும் அத்தனை பிராடுகளும், ஒன்றாக சேர்ந்து கொண்டீர்கள். கோயிலுக்கு விஸ்வாசம் என்பதே இல்லை. கமிஷனர், போலீஸ் புகாரே கொடுக்கச் சொல்லிவிட்டார். நான் அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் புகார் போலீஸாருக்குக் கொடுத்துவிடுவேன்.

வாங்கும் சம்பளத்துக்கு ஒரு சதவீதம்கூட உண்மையாக பணிசெய்யவில்லை. இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் இருவரையும் உடனே சஸ்பெண்ட் செய்ய கமிஷனர் சொல்லியிருக்கிறார். இதேபோல் ராஜேஷ், சொர்ணம், விஜயன் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து டிஸ்மிஸ் செய்யச் சொல்லியிருக்கிறார். டிக்கெட் சாவியை உள்துறையில் இருக்கும் அய்யரிடமும், செக்யூரிட்டியிடமும் கொடுத்துவிட்டு பலரையும் விஜபி தரிசன பாதை வழியே அனுப்பியிருக்கிறீர்கள். என் பெயரையும் பயன்படுத்தி சில பிராடுதனங்களைச் செய்திருக்கிறீர்கள். இதுதொடர்பான வீடியோ ஆதாரமும் இருக்கிறது. உங்கள் ஆட்டம் கண்டனத்துக்குரியது” எனப் பேசியுள்ளார்.

திருச்செந்தூர் ஆலயத்தின் மூல விக்கிரகத்தை தரிசிக்க செல்ல நான்கு நடைபாதைகள் உள்ளன. அதில் மூன்றை அடைத்துவைத்துவிட்டு ஒன்றின் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனாலேயே விஐபி தரிசன பாதை என்னும் ஊழலின் ஊற்றுக்கண்ணும் திறக்கப்படுகிறது. அனைத்து நடை பாதைகளின் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் கூட்ட நெரிசலும் இருக்காது. விஐபி தரிசன பாதையின் மீதான பணக்காரர்களின் கண்களும் இருக்காது என்கிறார்கள் உள்நடப்பு தெரிந்தவர்கள். அதற்கும் ஆவணச் செய்யுமா அறநிலையத்துறை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in