`உன்னை காதலிக்கிறேன்; நீயும் என்னை காதலிக்கணும்'- மறுத்த மாணவிக்கு வாலிபரால் நடந்த துயரம்

`உன்னை காதலிக்கிறேன்; நீயும் என்னை காதலிக்கணும்'- மறுத்த மாணவிக்கு வாலிபரால் நடந்த துயரம்

காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் குன்னூரில் நடந்துள்ளது. பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவர் தினமும் தனது வீட்டில் இருந்து தோழிகளுடன் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். நேற்று காலையும் மாணவி வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தோழிகளுடன் பேசிக்கொண்டே பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். பள்ளி அருகே வந்தபோது வாலிபர் ஒருவர், மாணவியை வழிமறித்து, நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பதறிய மாணவி, அவருடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது, நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து, வயிறு, தலை, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளிலும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைப் பார்த்து சக மாணவிகள் அலறினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கி்டையே, மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது வாலிபர் தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார். மக்கள் சுதாரித்து கொண்டு வாலிபரின் கையில் இருந்த கத்தியை தட்டிவிட்டு, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். வாலிபரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள், அவரை குன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் இருந்தது. இதையடுத்து, வாலிபரிடம் இருந்து கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவியை கத்தியால் குத்தியது குன்னூரை சேர்ந்த ஆசிக் (26) என்பது தெரியவந்தது. இவர் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி, வாலிபரின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் தினமும் மாணவி பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போதும் ஆசிக் பின் தொடர்ந்து செல்வதையும், காதலிக்குமாறு வற்புறுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல்தான் பள்ளிக்கு வந்த மாணவியை மறித்து தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. அந்த வாலிபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.