
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கோவை மாநகரில் குப்பை எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.507 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி ரூ.721 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி 3வது நாளாக, தூய்மை பணியாளர்கள் கோவை வ.உ.சி மைதானத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து தொழிற்சங்க தலைவர்கள் உரையாற்றினர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் தங்களை இதுவரை நிரந்தரம் செய்யவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் குப்பை எடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் இப்படி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மழைநீருடன் சகதியும் சேர்ந்து, குப்பைக் கூளங்களாக காட்சியளித்து, துர்நாற்றம் வீச துவங்கியுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!