தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்: அரசு என்ன செய்ய வேண்டும்?

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்: அரசு என்ன செய்ய வேண்டும்?
விருதுநகர் மாவட்டத்தில் பிடிபட்ட 63 மூட்டை ரேஷன் அரிசி

தென் மாவட்டங்களில் தினந்தோறும் கடத்தல் ரேஷன் அரிசி பிடிபட்டுக்கொண்டிருக்கிறது. ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குத் தராமல் பதுக்கி வைத்து, அந்த அரிசியை மொத்தமாக கடத்தல் கும்பலுக்கு விற்பதும், அதில் தரமான அரிசியை பாலீஷ் செய்து அரிசிக்கடைகளில் விற்பதும், மோசமான அரிசியை கோழி, மீன் வளர்ப்புக்கு விற்பதும் தொடர்கதையாக இருக்கிறது. இதற்காக மதுரை உள்ளிட்ட ஊர்களில் சில அரிசி ஆலைகள் இரவு பகலாக இயங்கிவருகின்றன.

இன்று அதிகாலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வலையங்குளம் சந்திப்பில், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் ஒரு சரக்கு வேன் பிடிபட்டது. அதில் மொத்தம் 63 மூட்டைகளில் 2 ஆயிரத்து 835 கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்த போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், வேனில் இருந்த மூவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை காமராஜர் தெருவை சேர்ந்த பாண்டி (24), ஆறுமுகம் (32), முனீஸ்வரன் (23) என்று தெரியவந்தது. அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி மதுரையில் உள்ள ஆலைக்கு கடத்திச் செல்வதை இவர்கள் வழக்கமாக வைத்திருந்ததும் உறுதியானது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரேஷன் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பொட்டலமிட்டு வழங்குவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. ஆட்சிக்கு வந்து 10 மாதமாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பொட்டலமிட்டு வழங்கினால், எடையைக் குறைத்து பதுக்கி இவ்வாறு கள்ளச் சந்தையில் விற்க முடியாது என்பதால் அந்த வாக்குறுதியை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in