சொத்துகள் பறிமுதல்; வங்கி கணக்குகள் முடக்கம்!- கஞ்சா வியாபாரிகளுக்கு கடிவாளம்

சொத்துகள் பறிமுதல்; வங்கி கணக்குகள் முடக்கம்!- கஞ்சா வியாபாரிகளுக்கு கடிவாளம்

கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வோரின் வங்கி கணக்கு மற்றும் சொத்துகளை முடக்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கஞ்சா வேட்டை ஆபரேஷன் தொடங்கி தீவிரமாக குட்கா மற்றும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கஞ்சா வேட்டை 1.0-வில் கஞ்சா, குட்கா, ஹெராய்ன் போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மொத்தம் 8929 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2299 கிலோ கஞ்சா, 40 டன் குட்கா மற்றும் போதை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்திய 197 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 28-ம் தேதி முதல் கஞ்சா வேட்டை 2.0 ஆபரேஷனை தமிழக காவல் துறை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 15 நாட்களில் மட்டும் 1778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதேபோல 4334 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 31.2 டன் குட்கா மற்றும் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளை முற்றிலுமாக ஒடுக்க தமிழக காவல் துறை புதிய நடைமுறையை மேற்கொண்டுள்ளது. அதாவது, கைது செய்யப்படும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகள் சம்பாதித்த மொத்த சொத்துகளை முடக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகளும், ஆறு நிலம், வீட்டுமனை, வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் முடக்கி உள்ளதாகவும், மதுரையில் 29 வங்கி கணக்குகள் மற்றும் நிலம், தேனியில் 8 வங்கி கணக்குகள் மற்றும் வீட்டுமனைகள் முடக்கி இருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்டவிரோதமாக வாங்கிகுவித்த சொத்துகளையும் முடக்கி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கஞ்சா கடத்துவோர், விற்போர் மற்றும் பதுக்குவோர், இந்த குற்றத்தின் மூலமாக சம்பாதித்த அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in