வீடு குத்தகைக்கு விடுவதாக ரூ.10 கோடி மோசடி: குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகரால் பரபரப்பு!

நடிகர் டோனி
நடிகர் டோனி
Updated on
3 min read

வீடு குத்தகைக்கு விடுவதாக கூறி நடிகர் , நடிகைகள் உள்ளிட்ட சிலரைக் குறிவைத்து 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நடிகர் டோனி புகார் கூறியுள்ளார். அத்துடன் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானார் நடிகர் டானி. இவர் 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'மரகத நாணயம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.. இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் எஸ்கேஎஸ்டி என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் லீசுக்கு வீடு ஒன்றை கொடுத்து தன்னிடம் பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல நடிகர்கள், நடிகைகள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மற்றும் லீசுக்கு வீடு தேடுபவர்களையும் குறி வைத்து ஓரே‌ நிறுவனம் தொடர்ந்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுப் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் உறவினர்களான காவியா , திவ்யா ஆகிய இரு பெண்களை மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கட்டப்பா சிவக்குமார் தலைமறைவான நிலையில் 11 மாதங்களாக அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கைதான காவியா
கைதான காவியா
தலைமறைவான கட்டப்பா சிவக்குமார்
தலைமறைவான கட்டப்பா சிவக்குமார்

இந்நிலையில் இந்த மோசடி விவகாரத்தில் பிரபல நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நடிகர் நாகேந்திர பிரசாத் சிக்கியதன் மூலம் இந்த மோசடி கும்பல்கள் பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, நடிகர் நாகேந்திர பிரசாத் தன் சொந்த வீட்டை எஸ்கேஎஸ்டி நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துள்ளார். பின்னர் எஸ்கேஎஸ்டி நிறுவனம் அந்த வீட்டை விக்னேஷ் என்பவரிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை லீசுக்கு கொடுத்துள்ளது. மாதம் 36 ஆயிரம் ரூபாய் வாடகையாக நாகேந்திர பிரசாத்திற்கு நிறுவனம் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு வாடகை தராமல் நிறுத்திவிட்டது. இதனால் சில நாட்களுக்கு முன்பு வீட்டை லீசுக்கு எடுத்த விக்னேஷீக்கும் வீட்டு உரிமையாளரான நடிகர் நாகேந்திர பிரசாத்திற்கும் இடையே வீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் நடிகர் நாகேந்திர பிரசாத் ஏமாந்தது, ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் தேடப்பட்டு வரும் எஸ்கேஎஸ்டி நிறுவன நிர்வாகியான கட்டப்பா சிவகுமார் உள்ளிட்டோர் மூலம் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நாகேந்திர பிரசாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

கைதான திவ்யா
கைதான திவ்யா

இந்நிலையில் ஏற்கெனவே புகார் அளித்த நடிகர் டானி தற்போது இந்த மோசடி கும்பல் சேர்ந்தவர்கள் குறித்து புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு அவர்கள் ஏமாற்றியது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் எஸ்கேஎஸ்டி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் பத்து பேர் சேர்ந்து பலரையும் ஏமாற்றி இருப்பதாகவும்

ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பெங்களூரிலும் பலரை ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதே கும்பல் பல்வேறு பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி பலரையும் ஏமாற்றியுள்ளதாக நடிகர் டானி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக முக்கிய குற்றவாளியான கட்டப்பா சிவகுமார் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள காவியா,திவ்யா, மற்றும் நாராயணசாமி, பின்சி ,ஜென்சி, ஷர்புதீன் மாலிக் பாட்ஷா, சோனியா, பாபு, முபாரக் என பத்து பேர் கொண்ட கும்பல் பெயரையும் புகைப்படங்களையும் வெளியிட்டு மக்கள் இவர்களிடம் ஏமாற வேண்டாம் என நடிகர் டானி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிறுவனம் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் பலரையும் ஏமாற்றி இருப்பதாகவும் பல நடிகர், நடிகைகள், பாதிக்கப்பட்டவர்களும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். வீட்டைக் குத்தகைக்கு கொடுத்து ஏமாந்தவர்களும், குத்தகைக்கு எடுத்து ஏமாந்தவர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது,‌

இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான கட்டப்பா சிவகுமார் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் விரைந்து கைது செய்து இழந்த பணத்தை மீட்டு தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in