நிலத்தகராறு தொடர்பாக புகார் செய்யச் சென்ற வாலிபர், புறக்காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேசத்தில் புகார் எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் தினேஷ் சிங் பதவுரியா(28). இவர் ஹனுமந்த் விஹார் புறக்காவல் நிலையத்திற்கு (போலீஸ் அவுட்போஸ்ட்) நேற்று மாலை புகார் கொடுக்கச் சென்றார். அவரது நிலத்தை அண்டை வீட்டார் ஆக்கிரமித்துள்ளதாக பதவுரியா புகார் கொடுத்தார்.
அப்போது போலீஸ் அவுட்போஸ்ட்டில் இருந்த பொறுப்பாளர் அசோக் யாதவ், பதவுரியாவை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை விட்டு விடுமாறு பதவுரியாவின் உறவினர்கள் கெஞ்சியுள்ளனர். ஆனால், பதவுரியாவை காவலர்கள், நீண்ட நேரம் கழித்து அனுப்பியுள்ளனர். அப்போது அவரது உடல் நிலை மிக மோசமான நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து பதவுரியா அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகார் கொடுக்கச் சென்றவர், போலீஸ் அவுட்போஸ்ட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும், அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த கூடுதல் டிசிபி(தெற்கு) அங்கிதா சர்மா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களைச் சமாதானம் செய்தார். இதையடுத்து பதவுரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இறந்தவரின் உடலை மருத்துவக் குழு பிரேதப் பரிசோதனை நடத்தும் என்றும், அது முழுமையாக வீடியோவும் எடுக்கப்படும் என்றும் , குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அங்கிதா சர்மா கூறினார். புகார் கொடுக்கச் சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.