பரபரப்பு... பொதுமக்களிடம் 40 கோடி ரூபாய் மோசடி... மதுரையின் பிரபல நகைக்கடை மீது புகார்!

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்
Updated on
1 min read

மதுரையில் 40 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நடைக்கடை மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சேர்ந்த கீர்த்திகா என்பவர், மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனுவில், மதுரை மேலமாசி வீதியிலுள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு சில மாதத்துக்கு முன்பு சென்றேன்.

உரிமையாளர் பழைய நகையை டெபாசிட் செய்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடுதல் வட்டியுடன் புதிய நகை பெறலாம் என கூறினார். இதை நம்பி 2022 செப்டம்பர் 24-ல் 40 கிராம் நகை, டிசம்பர் 23-ல் 8 கிராம் நகையும் டெபாசிட் செய்தேன்.

முதலில் டெபாசிட் செய்த நகைக்கு ஓராண்டுக்கு பின் 3 கிராம் தங்கக் காசுடன் புதிய நகையை பெற கடந்த மாதம் 24-ம் தேதி கடைக்கு சென்றேன். கடையில் இருந்த ஊழியர்கள் ஒருவாரம் கழித்து வருமாறு கூறினர். ஒரு வாரத்துக்கு பிறகு சென்றாலும் புதிய நகையை வாங்க முடியவில்லை.

புகார் கொடுக்க வந்தவர்கள்.
புகார் கொடுக்க வந்தவர்கள்.

கடந்த 12-ம் தேதி சென்றபோது, நகைக்கடை பூட்டியிருப்பது கண்டு அதிர்ந்தேன். மேலும், என்னை போன்று பலரிடம் பழைய நகை டெபாசிட் பெற்றும், நகைக்காக தவணை முறையில் பணம் வசூலித்தும் பல கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது.

பிரணவ் நகைக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நகையை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூட்டியிருந்த பிரணவ் நகைக்கடை முன்பு காலை திரண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இந்த நகைக்கடை தங்களிடமிருந்து 40 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது என மக்கள் புகார் செய்தனர்.

காவல்துறையினர் அவர்களிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பினர். இருப்பினும், அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டனர். வழக்கறிஞர் ஜெயா என்பவர் தலைமையில் காவல் ஆணையர் லோகநாதனிடம் 80-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். துணை ஆணையர் மங்களேசுவரன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in