
திருவள்ளூா் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது விரைவு ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையைச் சோந்தவர் ரேகா(22). இவா் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு செவ்வாய்க்கிழமை பிறந்த நாள் என்பதால், வீட்டின் அருகே உள்ள அழகு நிலையம் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ரயில் வருவதற்காக கேட் சாத்தப்பட்டிருந்தது. ஆனாலும் ரயில் வருவதற்குள் தண்டவாளத்தைக் கடக்க ரேகா முயன்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் ரேகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்தநாளில் கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.