விஜயலட்சுமி
விஜயலட்சுமி

மன உளைச்சல்; 13வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

13வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (17). அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விஜயலட்சுமி 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாகவும்,  மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து விஜயலட்சுமி மாயமானார். இதனால் பயந்து போன பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், உடனடியாக ஞானபாரதி காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விஜயலட்சுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையே விஜயலட்சுமி,  தர்மஸ்தலாவுக்கு சென்று,  நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த வயதானவர் ஒருவர், விஜயலட்சுமியை மீட்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரு போலீசார், விஜயலட்சுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்கு  பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  நாகரபாவி மைசூரு சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு சென்ற அந்த மாணவி அந்த கட்டிடத்தின் 13வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென குதித்தார். கீழே விழுந்த விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பேடராயனபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in