ஐபிஎஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட்... கோவை சிபிஐ நீதிமன்றம் அதிரடி!

ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார்
ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார்
Updated on
1 min read

பாசி நிதி நிறுவன முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் 870 கோடி ரூபாய் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவனத்தின் இயக்குநரை கடத்தி பணம் பறித்ததாக அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரமோத் குமார் 2012ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பதை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை மீண்டும் பணியமர்த்தும்படி 2016ம் ஆண்டு உத்தரவிட்டது.

கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து மீண்டும் பணி வழங்கப்பட்ட அவர், தற்போது கரூரில் தமிழ்நாடு காகித ஆலையில் உயர் பதவியில் உள்ளார். 2013ம் ஆண்டில் சிபிஐ பதிவு செய்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றைய தினம் அந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பிரமோத் குமார் தவிர மற்ற அனைவரும் ஆஜராகினர். எனவே பிரமோத் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in