சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தில் 7 இடங்களில் மோதல்: அரசு பஸ், ஆட்டோக்கள் சேதம்

சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தில் 7 இடங்களில் மோதல்: அரசு பஸ், ஆட்டோக்கள் சேதம்

சித்திரைத் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 7 இடங்களில் மோதல் நடந்தது. ஒரு அரசு பஸ், 2 ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன.

சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கள்ளழகரை பார்க்க, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், மதுரை கிராம பகுதிகளில் இருந்து கள்ளழகரை பார்க்க திரள்வார்கள். அவர்கள், ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொள்வார்கள். அப்போது மோதல்கள் ஏற்படுவதை தடுக்கம், சட்டம், ஒழுங்கை கண்காணிக்கவும் போலீஸார் நேரடியாகவும், சீருடை இல்லாமலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த முறை ‘ட்ரோன்’ கேமராக்களை கொண்டும் கண்காணித்தார்கள். ஆனால், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று முன்தினம் மூன்றுமவடியில் எதிர்சேவையில் கள்ளழகர் மாலை 6 மணிக்கு அவுட் போஸ்ட், இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகேயும் வந்தார். அப்பாது அப்பகுதிகளில் அதிகமான கூட்டம் திரண்டிருந்தனர். அப்போது முதல் போலீஸார், கூட்டத்தை கண்காணிக்கவும், ஒழுங்குப்படுத்தும் செய்தனர். இளைஞர்கள், கூட்டம் கூட்டமாக ஆட்டம், பாட்டத்துடன் பங்கேற்றனர். அவர்களில் பலர் மது அருந்தும், கைகளில் சில ஆயுதங்களை வெளிப்படையாக வைத்துக் கொண்டு வலம் வந்தனர். போலீஸார் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், நேரடியாக பார்த்தும் அவர்களை எச்சரித்து அனுப்பினர். திருவிழாவில் இளைஞர்களுக்கு இடையே ஜாலியாக ஆரம்பித்த சத்தம் சில இடங்களில் வார்த்தை மோதல், வாக்குவாதம் என்று ஒரு கட்டத்தில் தகராறு ஏற்பட காரணமானது. அதிகாலை 5 மணி வரை பல்வேறு சம்பவங்கள் நடந்தது.

இரண்டு ஆட்டோக்கள், ஒரு அரசு பஸ்கள் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது. 7 இடங்களில் இரு பிரிவாக இளைஞர்கள் மோதிக் கொண்டனர். இரண்டு இடங்களில் கத்திகுத்து சம்பவங்கள் நடந்தது. தல்லாக்குளம் பகுதியில் போலீஸாரையே கத்தியால் குத்த முயன்ற சம்பவமும், எதிர்த்து அடிக்க முயன்ற சம்பவங்களும் நடந்தது. மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அவசர எண் 100 அழைப்பில் நேற்று முன்தினம் 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 30 வன்முறைகள் தொடர்பான அழைப்புகள் வந்தன. இதுதொடர்பாக சில வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘இதுவரை சித்திரைத் திருவிழாவில் இந்த முறை போல் பெரிய தகராறுகள் ஏற்படவில்லை. கடந்த காலத்தில் சில இடங்களில் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து சென்றுவிடுவா்கள். ஆனால், இந்த முறை இளைஞர்கள் ஆக்ரோஷமாக கலந்து கொண்டனர். அவர்கள் கூட்டம், கூட்டமாக சென்று யாரையாவது வம்புக்கு இழுக்க வேண்டும் நோக்கத்துடன் சென்றனர். மிக அதிகளவில் கண்காணித்துமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட்டது’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in