
பாகிஸ்தான் பெண்ணின் ஹனி டிராப் பொறியில் சிக்கி, ஆந்திராவை சேர்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர், முக்கிய ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சர்வதேச உளவு வலை முதல் உள்ளூர் அரசியல் கால்வாரல் வரை ஹனி டிராப் உத்தி பிரபலமாகி வருகிறது. சபலப் பேர்வழிகளை குறிவைத்து, பெண்கள் அல்லது பெண்களின் பெயரில் இணையத்தில் வலம் ஆண்கள் வலைவிரித்து வருகிறார்கள். இவர்களிடம் சிக்கும் நபர்கள், பாலியலுக்காக தாங்கள் பணிபுரியும் துறையின் முக்கிய ரகசியங்களை எதிரி தேசங்களுக்கு விற்கவும் செய்கிறார்கள்.
ஆந்திராவை சேர்ந்தவர் கபில் குமார் ஜக்தீஷ் தேவ்முராரி. மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரான இவர் முன்னதாக, ஹைதராபாத் பானூரில் இயங்கும் பாரத் டைனமிக்ஸ் தொழில் நிறுவனத்திலும் பின்னர் விசாகப்பட்டினம் விஷாகா ஸ்டீல் பிளாண்டிலும் பணி புரிந்து வந்தார். திருமணமானபோதும் மனைவியை பிரிந்து வாழும் இவருக்கு, ஃபேஸ்புக் வாயிலாக ஒரு சிநேகிதி கிடைத்தார்.
தமிஷா என்ற பெயரில் அறியப்படும் அந்த பெண்ணுடனான சமூக ஊடக நட்பு மேலும் நெருங்கியதில், வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசும் அளவுக்கு மாறியது. மனைவியை பிரிந்து வாழும் கபில் குமாரை நன்கறிந்த தமிஷா, அவருக்கு வீடியோ காலில் நிர்வாண தரிசனம் தந்து தன்வயப்படுத்தி உள்ளார். பிரதிபலனாக கபில் குமார் பணியாற்றும் ஸ்டீல் பிளாண்ட், முன்னதாக பணியாற்றிய பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றின் ரகசிய கோப்புகளை கோரி இருக்கிறார்.
மத்திய தொழிற் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டரான சரவணன் என்பவருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கபில் குமாரை திடீரென மடக்கி அவரது 3 செல்போன்களை ஆராய்ந்தனர். அதில் கபில் குமார் ஹனி டிராப்பில் சிக்கி, கடந்த 2 வருடங்களில் பல்வேறு ரகசிய தகவல்களை தமிஷாவுக்கு தந்தது உறுதியானது. தொடர் விசாரணையில், தமிஷா மற்றும் அந்த பெண்ணின் அடையாளங்கள் அனைத்தும் போலி என்றும், அவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுவின் தலைவனுக்கு உதவியாளராக இருப்பவர் எனவும் தெரிய வந்துள்ளது.
செல்போன்களின் தகவல் பரிமாற்றங்கள் பலதும் கபில் குமாரால் அழிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மீட்க தடயவியல் பரிசோதனைக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் பின்னணி விவரங்கள் வெளியான பின்னரே, ஹனி டிராப்பிங் முழு பரிமாணமும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.