தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி சுருட்டல்! மோசடி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

சீட்டு கம்பெனி மோசடி
சீட்டு கம்பெனி மோசடி

சென்னை அருகே தீபாவளி சீட்டு நடத்தி 50,000 பேரிடம் பணம் பறித்து ஏமாற்றிய சீட்டு கம்பெனியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காந்தி நகரில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி, அட்சய திருதியை, பொங்கல் சீட்டு நடத்தி வந்துள்ளனர். இங்கு சீட்டு பிடித்து கொடுத்தால் கமிஷன் என்ற அடிப்படையில் ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. சோழவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடப்பாளையம், அத்திப்பேடு என 100க்கும் மேற்பட்ட கிராமங்களை குறிவைத்து இந்த சீட்டு கம்பெனி செயல்பட்டு வந்தது. மாதம் 500, 1000 ரூபாய் என 12 மாத சீட்டு பணம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நகை, மளிகை பொருட்கள், பட்டாசு, பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீட்டு கம்பெனி உரிமையாளர் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னர் தலைமறைவானார். இதனால், கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கே நகை, பொருட்களை இதுவரை கொடுப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர் போலீஸில் புகார் அளித்ததோடு, பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என கோரி பலமுறை போராட்டமும் நடத்தினர்.

பொதுமக்கள் முற்றுகை
பொதுமக்கள் முற்றுகை

இந்நிலையில், இன்று பணம் வசூலித்த நிறுவன வாயிலில் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் என வாடிக்கையாளர்கள் வரிசை எண் அடிப்படையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீபோல் பரவியது. இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்துபோன மக்கள் திரளானோர் அந்த அலுவலகத்திற்கு முன் திரண்டனர். ஆனால், அங்கு நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்டோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சாலையில் அமர்ந்து போராடிய சிலரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணத்தை பெற்றுத்தருவதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in