வேலையால் கவனிக்காத அத்தை... தவறி விழுந்த குழந்தை: உயிரைப் பறித்த நீச்சல் குளம்

வேலையால் கவனிக்காத அத்தை... தவறி விழுந்த குழந்தை: உயிரைப் பறித்த நீச்சல் குளம்
குழந்தை ஹரிஹரன்

சென்னையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த அத்தை, குழந்தையை கவனிக்காததால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர், பெரியார் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செந்தில்குமார் (37). இவரது 4 வயது குழந்தை ஹரிஹரன் நேற்று மாலை அவரது அத்தை உஷா என்பவருடன் கே.கே.நகர் அம்மன் கோயில் தெருவில் அவர் வேலை பார்த்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு உஷா தான் வேலை பார்த்துவரும் வீட்டு உரிமையாளர் ராமுவின் குழந்தைகளுடன் ஹரிஹரனை விட்டுவிட்டு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை ஹரிஹரன் வீட்டு உரிமையாளரின் குழந்தைகளான அத்வக் (6), அத்தியூ(4) ஆகியோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் பின்புறம் உள்ள நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குழந்தை ஹரிஹரன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்ததை பார்த்து கூச்சலிட்டதை அடுத்து அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஐந்தரை அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் குதித்து குழந்தை ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தை ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.