’மிஸ் யூ அம்மா... அப்பா...’ ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை; ஆன்லைன் விபரீதம்!

உயிரிழந்த கோபிநாத்
உயிரிழந்த கோபிநாத்

ஆன்லைன் ஆப் மூலம் வாங்கிய கடனை கட்டத் தவறிய வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாலிபரின் செல்போனில் இருந்த உறவினர்கள், நண்பர்களின் எண்களுக்கு அனுப்பி வைத்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டை நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (33). பாஜகவிலும் இந்து முன்னணி அமைப்பிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். திருமணம் ஆகாத இவர், தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கலெக்சன் பணியும் செய்து வந்துள்ளார். கோபிநாத்திற்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபிநாத் quick cash app என்ற ஆன்லைன் கடன் செயலி மூலமாக ரூ.50,000 கடனாக பெற்றுள்ளார். முதல் இரண்டு மாதம் கடன் தவணையை சரியாக செலுத்திய நிலையில், கடந்த மாதம் அவரால் கடன் தொகையை செலுத்த முடியவில்லை.

ஆபாச படங்களை சித்தரித்து அனுப்பி மிரட்டல்
ஆபாச படங்களை சித்தரித்து அனுப்பி மிரட்டல்

இதனால் கடன் பெற்ற நிறுவனத்தில் இருந்து கோபியை தொடர்பு கொண்டு கடனை செலுத்துமாறு கேட்டுள்ளனர். அடுத்த மாதம் சேர்த்து கட்டி விடுவதாக கோபிநாத் கூறியும், அவர்கள் தொடர்ந்து கடனை கட்டுமாறு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கோபிநாத்தை தொடர்பு கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், கோபிநாத்தின் ஆபாச படங்களை யாரோ தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் படத்தின் கீழ் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றிய நபர், கடன் தவணையை செலுத்தத் தவறியவர் என குறிப்பிட்டுள்ளதாக கூறியதுடன், அந்த புகைப்படங்களை கோபிநாத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆன்லைன் ஆப் கடன் செயலிகளால் தற்கொலை
ஆன்லைன் ஆப் கடன் செயலிகளால் தற்கொலை

அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிநாத்திற்கு, தனது புகைப்படங்களை ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு, நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் இப்படித்தான் செய்வோம் என எதேச்சதிகாரமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடனை கட்டும் வரை இதுபோன்று ஆபாசப் படங்களை சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வைப்போம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

உயிரிழந்த கோபிநாத்
உயிரிழந்த கோபிநாத்BG

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான கோபிநாத், நேற்று இரவு வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோபிநாத் கீழே வராததால், சந்தேகம் அடைந்த அவரது தந்தை மணி, மாடிக்கு சென்று பார்த்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக எழும்பூர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், கோபிநாத், தனது செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பகுதியில், ’ஐ மிஸ் யூ அம்மா... அப்பா’ என்று பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படும் இது போன்ற ஆன்லைன் ஆப் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in