ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை: தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சிக்கிய சென்னை இன்ஸ்பெக்டர்

ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை: தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சிக்கிய சென்னை இன்ஸ்பெக்டர்

தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரித்த வழக்கில் ஓராண்டாக தேடப்பட்டு வந்த காவல் ஆய்வாளரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிலர் கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துக்களை அபகரித்ததாக பாதிக்கப்பட்ட தொழிலதிபர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு தொழிலதிபர் கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், ஆந்திர தொழிலதிபர்கள் உள்பட 10 பேர் மீது 5 பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகுமார் ஆந்திர தொழிலதிபர் வெங்கட சிவநாக குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் காவல் உதவி ஆணையர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு தங்க இடம், பணம் கொடுத்து உதவியதாக சவுகத் அலி, நந்தகுமார், சரவணகுமார் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வழக்கு தொடர்புடைய பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் தனிப்படைகள் அமைத்து உதவி ஆணையர், ஆய்வாளர், காவலர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் சரவணன் மதுரவாயல் அருகே நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று இரவு அங்கு சென்று நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த ஆய்வாளர் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஆய்வாளர் சரவணன் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in