
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தினம்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வணிக கட்டிடங்களை வாடகைதாரர்கள் ஆக்கிரமித்து இருந்ததாக கூறி, அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கட்டிட பணிகளால் அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்திற்கு சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோயில்கள் மற்றும் புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில், நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ராஜகோபுரத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் 150 கடைகளை கொண்ட 2 அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாகவும், இதனால் ராஜகோபுரத்தை தரிசிப்பதோ, ராஜகோபுரத்தின் கட்டுமானமோ பாதிக்கப்படாது” என வாதிட்டார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோபுரத்தை மறைக்கும் வகையில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த தடை உத்தரவு பிறப்பித்த, பிற்பகல் 2:40 மணியில் இருந்து எந்த விதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கண்டிப்பாக அறிவுறுத்தினர்.