சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றும் விண்ணப்பம்... தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்

யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாய் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என, தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தாக்கப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக நீதி விசாரணை நடத்தக் கோரியும், அவருக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக் கோரியும் அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தாக்குதல் சம்பந்தமாக விசாரித்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி, கோவை சிறை நிர்வாகத்துக்கு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று அவர் புறநோயாளியாக சிகிச்சைக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.” என்றார்.

சவுக்கு சங்கரின் தாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி சிறைத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதி வழங்கவேண்டும்.” என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கெனவே நீதி விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகக் கூறி, சங்கரின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், வேறு சிறை மாற்றக் கோரி சவுக்கு சங்கரின் தாய் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என, சிறைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in