‘கருப்பர் தேசம்’ யூடியூப் சேனலுக்கு 1 கோடியே 1,000 ரூபாய் அபராதம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
2 min read

சேவா பாரதி அறக்கட்டளை குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் தேசம் யூடியூப் சேனலுக்கு 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் கருப்பர் தேசம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீஸார் அவர்களை அடித்து துன்புறுத்திய நிலையில், படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பர் தேசம் யூடியூப் சேனலில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இதில் சுரேந்திரன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கமான சேவா பாரதி அமைப்பு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

யூடியூப் சேனல்
யூடியூப் சேனல்

இதையடுத்து சுரேந்திரன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரான வழக்கறிஞர் ரபு மனோகர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'ஆர்.எஸ்.எஸ்.இன் அங்கமான எங்களது சேவபாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம். இதனால் எங்கள் அமைப்புக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில் கருப்பர் தேசம் என்று யூடியூப் சேனலை நடத்தி வரும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், சேவாபாரதி அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். சாத்தான்குளம் போலீஸாரால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்குடன், சேவா பாரதி அமைப்பை தொடர்புப்படுத்தி பொய்த் தகவலைப் பரப்பி வீடியோ பதிவிட்டுள்ளார். எனவே அவர் எங்கள் அமைப்புக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சேவா பாரதி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சேவா பாரதி

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்க எதிர் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் எதிர் தரப்பில் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதையடுத்து மனுதாரர் கோரியுள்ள ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக, வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் கருப்பர் தேசம் யூடியூப் சேனலை நிர்வாகித்து சுரேந்திரன், சேவாபாரதி அறக்கட்டளை அமைப்பிற்கு வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார். மேலும் சேவா பாரதி அமைப்பு குறித்து சுரேந்திரன் பேசுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in