துப்பாக்கிகள் பறிமுதல் குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? - போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்போரூர் அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
திருப்போரூர் அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

திருப்போரூர் அருகில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என பதிலளிக்கும்படி, தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த இளலூர் அருகில், திருப்போரூர் போலீஸார், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று பேசிக் கொண்டிருந்த பிரிதிவிராஜ், கார்த்திகன், வசந்த் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வந்த இரு கார்களை சோதித்த போது, அதில் மூன்று துப்பாக்கிகள் மற்றும் 163 தோட்டாக்கள், 57 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பிரிதிவிராஜ் உள்பட மூவரை கைது செய்தனர்.

துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட மூவர்
துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட மூவர்

இதுதொடர்பாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், உரிமம் இல்லாத ஆயுதங்கள் வைத்திருந்த இந்த வழக்கில் முக்கிய நபரான ராடியன்ஸ் குரூப் நிறுவன நிர்வாக இயக்குனரை வழக்கில் சேர்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி பறிமுதல் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டாலோ, விசாரணையே நடைபெறாவிட்டாலோ விசாரணையை மாற்றலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், துப்பாக்கிகள் பறிமுதல் குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என விளக்கமளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த வசந்த், முன்னாள் எம்.எல்.ஏ., இதயவர்மனின் உறவினர் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in