
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கார்த்தி (42). இவர், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தனி அறையில் வசித்து வந்தார். உறவினர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்தியின் இடது கை மணிக்கட்டில் குளுக்கோஸ் ஏற்றும் ஊசி குத்தப்பட்டிருந்தது.
அறை முழுக்க ரத்தம் பீறிட்டு, காய்ந்த நிலையில் சிதறி கிடந்தது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை, போலீஸார் கைப்பற்றி திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன்னர் கார்த்தி கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்துள்ளார். அதில், ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ எனகுறிப்பிட்டு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் மேலும் கூறுகையில், “மருத்துவர் கார்த்தி 3 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர். இவரது பெற்றோர் புதுச்சேரி ரெயின்போ நகரில் வசிக்கின்றனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சில மாதங்களாக இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணம் குறித்து தகவல் திரட்டப்பட்டு வருகிறது” என்றனர்.