அண்ணனிடமிருந்து பணம் பறிக்க தன்னையே கடத்த ஐடியா கொடுத்த கமிஷன் ஏஜென்ட்!

40 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பல் சிக்கியது எப்படி?
அண்ணனிடமிருந்து பணம் பறிக்க தன்னையே கடத்த ஐடியா கொடுத்த கமிஷன் ஏஜென்ட்!

சென்னை சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்ரம் ஜெயின்(45). இவர் பொருட்களை வாங்கி விற்கும்  கமிஷன் ஏஜென்ட் தொழில் செய்து வருகிறார். நேற்று விக்ரம் தனது மனைவி சந்திரா ஜெயினிடம், சவுகார்பேட்டை செல்வதாகக் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் விக்ரம் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலம் அடையாளம் தெரியாத 3 பேர் சந்திராவைத் தொடர்பு கொண்டு, விக்ரம் ஜெயினைக் கடத்தி  இருப்பதாகவும் 40 லட்சம் பணம், நகையை கொடுத்து விட்டு அவரை மீட்டுச் செல்லுமாறு கூறினர். மேலும் கேட்ட பணத்தைத் தரவில்லை என்றால்  விக்ரமை  கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த  சந்திரா உடனே இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரியமேடு  போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். பின்னர், கடத்தல்காரர்கள் கேட்ட 40 லட்சம் பணம் தயாராக இருப்பதாகவும், பணத்தை வந்து பெற்று செல்லுமாறும் கடத்தல்காரர்களிடம் தெரிவிக்க சந்திராவிடம் அறிவுறுத்தினர்.

போலீஸார் சொன்னது போலவே கடத்தல்காரர்களிடம் சந்திரா தெரிவித்தார். இதையடுத்து பணத்தைப் பெறுவதற்காக வீட்டிற்கு காரில் வந்த கடத்தல்காரர்கள் இருவரில் ஒருவரை போலீஸார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து காரில் தப்பிச்சென்ற மற்றொரு கடத்தல்காரரை பிடிப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

பின்னர் காரின் வாகன எண்ணை வைத்து யானை கவுனி பகுதியில் வாகன தணிக்கையில் தப்பிச்சென்ற கார் பிடிப்பட்டது. விசாரணையில், பிடிபட்டவர்கள் திருப்பத்தூரை சேர்ந்த அல்தாப்(41) மற்றும் குரோம்பேட்டையை சேர்ந்த முரளி(35) என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

அசோக் பில்லரில் பைனான்ஸ் கன்சல்டிங் அலுவலகம் நடத்திவந்த சிவசுப்பிரமணியம் என்பவர் விக்ரம் ஜெயினிடம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 50,000 கிரிப்டோகரன்சிகளை (இந்திய மதிப்பு சுமார்  45 லட்ச ரூபாய்) கொடுத்து விற்பனை செய்து பணமாகக் கொடுக்கும்படி  அளித்துள்ளார்.  கிரிப்டோகரன்சியை வாங்கிய பின்னர் தனது வங்கிக் கணக்கை சிலர் ஹேக் செய்துவிட்டதாக  சிவசுப்பிரமணியத்திடம் விக்ரம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன் உடனே 44 லட்சம் ரூபாய் பணம் வேண்டுமென விக்ரம் ஜெயினை தொந்தரவு செய்து வந்துள்ளார். 

கடத்தல் நாடகமாடிய விக்ரம் ஜெயின்
கடத்தல் நாடகமாடிய விக்ரம் ஜெயின்

இதனால் விக்ரம் ஜெயின் தன்னைக் கடத்தியது போல் நாடகமாடி தனது அண்ணன் நேமிசந்த் ஜெயினிடம் இருந்து 40 லட்சம் பறிக்குமாறு சிவசுப்பிரமணிக்குத்  திட்டம் போட்டு கொடுத்திருக்கிறார். அதன் பேரில்  நேற்று சிவசுப்பிரமணியன் அலுவலகத்தில் பணிபுரியும் முரளி, அல்தாப் ஆகியோருடன் இணைந்து விக்ரம் ஜெயினை கடத்தியதாக நாடகமாடினர்.

முரளி, அல்தாப் அளித்த இந்தத் தகவலின் அடிப்படையில் சிவசுப்பிரமணியம், விக்ரம் ஜெயின் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனிடமிருந்து பணம் பறிக்க தம்பியே கடத்தல் நாடகமாடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in