சென்னையில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். போக்குவரத்து நெரிசலால் தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததால் கார் எலும்புக்கூடானது.
சென்னை குரோம்பேட்டையில் இருந்து பல்லாவரத்தை நோக்கி வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பான்ஸ் சிக்னல் கடந்தபோது திடீரென கார் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதைப் பார்த்த டிரைவர் காரை உடனே சாலையில் நடுவே நிறுத்திவிட்டு இறங்கிய நிலையில் உடன் இருந்தவர்களும் குதித்து உயிர் தப்பினர். சில நிமிடத்தில் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் வாகனத்துடன் விரைந்தனர். அப்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்தது. இதனால் கார் முற்றிலும் எரிந்து எலும்புகூடு போல் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.