விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டிய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டிய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு உடந்தையாக இருந்த இலங்கையை சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல் மற்றும் சென்னையை சேர்ந்த மோகன், பாஸ்கரன் ஆகியோர் தமிழக க்யூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை பெண் தடைச்செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டி பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் அனுப்பி வந்ததும், கடந்த 2018-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னைக்கு வந்து அண்ணாநகரில் வாடகை எடுத்து தங்கி ஆதார் கார்டு, கேஸ் இணைப்பு போன்ற ஆவணங்கள் வாங்கி, அதன் மூலமாக சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் இலங்கை பெண் போலி பாஸ்போர்ட் மூலமாக மும்பைக்கு சென்று அங்குள்ள வங்கி ஒன்றின் மூலமாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு 42 கோடி ரூபாய் அனுப்ப முயன்றதும் தெரியவந்தது. வேறு யாருக்கெல்லாம் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீதும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருவதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in