
இணையத்தில் பரவும் ராஷ்மிகா மந்தனா வீடியோ குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அதிர்ச்சி தெரிவித்ததை அடுத்து, இணையத்தில் ஊறிக்கிடக்கும் டீப் ஃபேக் தொழில் நுட்பத்துக்கு எதிரான விழிப்புணர்வு புதிய அலையாக எழுந்துள்ளது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளில் ஒன்று டீப் ஃபேக். ஒருவரின் உருவத்தில் இன்னொருவரை பொருத்தி போலியாக சித்தரிப்பது; அச்சு அசலான தோற்றத்தை பிரதிபலிக்கும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் எது போலி எது உண்மையானது என்று பிரித்தறிவது கடினம்.
இணையத்தில் இதற்கான டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாலியல் வறட்சி கண்டவர்கள் பொறுப்பின்றி ஆபாசத்தை கடை பரப்பி வருகின்றனர். குறிப்பாக சினிமா, சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் முன்னேறி வரும் இளம்பெண்கள் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இது தவிர்த்து தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில், பிடிக்காத பெண்களின் தோற்றத்தில் டீப் ஃபேக் கொண்டு போலியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பரப்பும் குற்றங்களும் அதிகரித்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனமுடைவதும், பொதுவில் நடமாட முடியாது போவதும், சோக முடிவை எடுப்பதுமாக துயரங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த தலைமுறைகளில் இல்லாதவகையில், பல்வேறு துறைகளிலும் சாதிக்கத்தலைப்படும் பெண்களை இந்த நவீன தொழில்நுட்பங்கள் அச்சுறுத்துகின்றன.
திரையில் கவர்ச்சி தாரகையாக வலம் வரும் சினிமா நட்சத்திரங்களே இந்த டீப் ஃபேக் மோசடிகள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது. தற்போதைய ராஷ்மிகா மந்தனாவின் மோசடி வீடியோவுக்கு அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்ததில், இந்த பிரச்சினைக்கு நட்சத்திர முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
இணையத்தில் எழுந்திருக்கும் விவாதங்களில் மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரும் பங்கேற்று அரசின் ஆட்சேபத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழான நடவடிக்கைகள் சிலவற்றையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வு தந்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்