அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: எண்ணூர் துறைமுகத்தில் பரபரப்பு!

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிஐஎஸ்எஃப் வீரர் குமார்
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிஐஎஸ்எஃப் வீரர் குமார்

எண்ணூர் துறைமுகத்தில் துப்பாக்கியால் சுட்டு மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில்(சிஐஎஸ்எஃப்) வீரராக பணியாற்றி வந்தார் .இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ரக்ஸின்(6), நிஷிதா (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக குமார் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு எண்ணூர் துறைமுகம் காமராஜ் ஸ்டேஷன் சிக்னல் பாயின்ட்டில் குமார் பணியின் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை மத்திய தொழிற் பாதுகாப்பு படை உதவி அதிகாரி ராஜு ரோந்து சென்ற போது குமார் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கையில் துப்பாக்கி பிடித்தவாறு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் மற்றும் மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் மீஞ்சூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் குமார் நேற்று இரவு பணியில் இருந்த போது தான் கையில் வைத்திருந்த இன்சாஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டாராஅல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in