`மனிதன் இயல்பாக செய்யும் தவறைத்தான் நானும் செய்தேன்'

குற்றத்தை ஒப்புக் கொண்ட பாஜக மாநில ஐடி பிரிவு தலைவர்
`மனிதன் இயல்பாக செய்யும் தவறைத்தான் நானும் செய்தேன்'

"உண்மை தன்மை அறியாமல் சமூக வலைத்தளத்தில் அந்த செய்தியை பரப்பியது தவறுதான். மனிதன் இயல்பாக செய்யும் தவறைத்தான் நானும் செய்தேன்" என்று பாஜக மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு தொடர்பான தவறான தகவல் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிப்பு செய்ததாக பாஜக மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.பி.ஆர்.நிர்மல் குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நிர்மல்குமார் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், தன் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளித்தேன். போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். தீபாவளி பண்டிகையின்போது போக்குவரத்து துறை ஸ்வீட்ஸ் டெண்டரை தனியாருக்கு வழங்கிய போது, அதை பா.ஜ.க சுட்டிக்காட்டியதால் டெண்டர் ஆவினுக்கு மாற்றப்பட்டது. அதேபோல் பொங்கல் தொகுப்பு, முதல்வர் பயணம் என திமுக அரசின் அவ்வப்போது நடைபெற்ற குற்றங்கள் பாஜக வெளிக் கொண்டு வருகிறது.

தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து வெளிக் கொண்டு வருவதுடன், அது தொடர்பான கருத்துகளை பதிவிடும் பாஜக மாவட்ட நிர்வாகிகளை குறிவைத்து புகார் அளித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் 60 புகார்கள் பாஜக நிர்வாகிகள் மீது கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வழக்குகள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு அளித்து திட்டமிட்டுள்ளோம். அரசியல் ரீதியான பதிவுகளுக்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதுடன், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன். இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றங்களை நாட உள்ளோம். அதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். ஆளும் கட்சியினர் சட்டத்தை வளைத்து பாஜகவினருக்கு எதிராக செயல்படுவதை சுட்டிக் காட்ட உள்ளோம்.

எதிர்கட்சியினர் தங்களுக்கு எதிராக பேசக்கூடாது என்ற நோக்கில் திமுக செயல்படுகிறது. எங்களுக்கு எதிராக எவ்வளவு வழக்குகள் தொடர்ந்தாலும் நாங்கள் இதேபோல் திமுகவின் ஒவ்வொரு தவறை சுட்டிக் காட்டுவோம். அவதூறு வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக கையாள திமுக நினைத்தால் நாளொன்றுக்கு 500 வழக்குகளை தமிழகத்தில் பதிவு செய்ய வேண்டும். திமுகவினர் உட்பட பலர் பிரதமர் 15 லட்சம் ரூபாய் உடை அணிந்தார் என தவறான தகவலைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாஜகவினர் மட்டும் இது போன்று செய்திகளை பரப்பவில்லை. பல கட்சியினரும் இதேபோன்று செய்திகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது இது போன்ற கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்காமல் பாஜகவினரை மட்டும் குறிவைத்து வழக்கு தொடுப்பது உள்நோக்கம் கொண்டது. உண்மை தன்மை அறியாமல் சமூக வலைத்தளத்தில் அந்த செய்தியை பரப்பியது தவறுதான். மனிதன் இயல்பாக செய்யும் தவறைத்தான் நானும் செய்தேன். அவ்வாறு தவறு செய்ததாக சுட்டிக்காட்டும் போது நான் மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு பாஜகவினர் குறித்து தினந்தோறும் அவதூறு பரப்பும் வகையில் பதிவுகள் வருகிறது. அது தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தால் கிரிமினல் வழக்கு மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் மீது புகார் அளித்த உடனே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

நான் பதிவு செய்தது உண்மை போன்று இருந்ததனால் நம்பி பதிவு செய்தேன். ஆனால் பின்னர்தான் அது போலி என தெரியவந்தது. எனவே எதை நம்பி நான் அந்த பதிவை செய்தேன் என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன். பல்வேறு ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து எந்த சூழ்நிலையில் அதை பதிவு செய்தேன் என்பதை நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பேன். சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான போலியான செய்திகள் பல குழுக்களாகவும், தனிநபர்களாலும் பகிரப்படுகிறது. இதனை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தொழில்நுட்ப சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். பாஜகவினரை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு காவல்துறையினர் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். குறிப்பாக போலியாக பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.