பற்றியெரியும் மணிப்பூர் விவகாரத்தில் அடுத்த திருப்பமாக, அங்கு சிபிஐ விசாரணை அமைப்பு தனது அதிகாரபூர்வ பணியைத் தொடங்கியது.
மே 4 அன்று மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோ, ஜூலை 19 அன்று இணையத்தில் வெளியாகி இந்தியாவை பதறச் செய்தது. பொதுமக்கள் மட்டுமன்றி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரையும் சீற வைத்தது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் தலைகுனிவை சேர்த்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கூட்டு பாலியல் பலாத்காரம், கொலைகள் உள்ளிட்ட மே 4 குற்ற நிகழ்வுகள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், முன்னதாக டிஐஜி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினை களமிறக்கிய சிபிஐ, தற்போது அதிகாரபூர்வமாக இன்று மணிப்பூரில் விசாரணையை தொடங்கி உள்ளது.
மே 4 சம்பவம் மட்டுமல்லாது, பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வுகள் மணிப்பூர் அதிகம் நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுவதை அடுத்து அவற்றை விசாரிக்க தோதாக கூடுதல் எண்ணிக்கையில், பெண் அதிகாரிகளுடம் சிபிஐ அமைப்பு மணிப்பூரில் குழுமியுள்ளது. இவர்களுடன் தடயவியல் குழுவினரும் அங்கே முகாமிட்டுள்ளனர்.
அதிகாரபூர்வமாக விசாரணையை தொடங்கிய சிபிஐ, மணிப்பூர் போலீஸார் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தங்களுக்கான முதல் தகவல் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. அதன் அடிப்படையில் மத்திய புலானாய்வு அமைப்பின் நடவடிக்கைகள் அடுத்து வரும் தினங்களில் சூடுபிடிக்க உள்ளன.