சென்னையில் நள்ளிரவில் பூனைகள் வேட்டையாடப்பட்டு ஒரு பூனை ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், அவை சாலையோர கடைகளில் பிரியாணிக்கு பயன்படுத்தப்படுவதாக பீதி எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் குளக்கரை சாலையில் வசித்து வருபவர் ஜோஸ்வா. விலங்கு நல ஆர்வலரான இவர், தினமும் நள்ளிரவு பணி முடித்து வந்ததும், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு வைக்கும் பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு சமீபத்தில் நாய்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர், சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்த நபர் சிறுவன் உதவியுடன் சாலைகளில் திரியும் பூனைகளை விரட்டிப்பிடித்து சாக்குகளில் போட்டார்.
இதனை கவனித்த ஜோஸ்வா அந்த நபரை பின் தொடர்ந்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம நபரும், சிறுவனும் பல்வேறு இடங்களில் பூனைையைப் பிடித்து சாக்கில் போட்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இதுகுறித்து கேட்க ஜோஸ்வா சென்றார். ஜோஸ்வா வருவதை அறிந்த அந்த நபர், விரைவாக சாக்கை இருட்டில் மறைத்தார். இருப்பினும் ஜோஸ்வா பூனை பிடித்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பினார்.
அதற்கு அந்த நபர் மழுப்பியுள்ளார். பின்னர் விடாப்பிடியாக கேட்டபோது பூனைகளை பிடித்து ஒரு பூனை ரூ.100 என்ற விலைக்கு விற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த ஜோஸ்வா மேலும் விசாரித்த போது, அந்த நபர் மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையோர கடைகளில் மலிவு விலைக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
எனவே இதுபோன்று வேட்டையாடப்படும் பூனைகள், பிரியாணியில் பயன்படுத்தப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து பூனைகளை வருங்கால தலைமுறைக்கு கார்ட்டூன் அல்லது புகைப்படத்தில் தான் காட்ட நேரிடும் என கவலை தெரிவித்துள்ளார். எனவே, சென்னையில் பூனை வேட்டை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.